Uncategorized

Kalaignar Dialogue Purananoor

வேண்மாள்: சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

சேரன்: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான். சேரனுக்கோர் செல்வன் பிறந்தான். அந்த செல்வண் இந்தச் சிலையை மணந்தான்;

வேண்மாள்: ‘தெரிந்த கதைதானே இது’

சேரன்: நடந்த கதை கூட

வேண்மாள்: நடக்காத கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்

சேரன்: சுவைக்காது கண்ணே அது.

வேண்மாள்: ஆங்.. காதல் கதை ஒன்று

சேரன்: ஹூஹூம். இதோ புறநானூற்றில்..

வேண்மாள்: போதும். வீரக் கதை தானே?

சேரன்: வீரத்தை மணந்த காதல் கதை!

தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண் ஒருத்தி, தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறக் காட்சி வேண்மாள்!
கொஞ்சம் கேளேன்; நானே எழுதி இருக்கிறேன் புதிய நடையில்.

காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களமமைத்த சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது.

அந்நாளில் போர் களத்தில், தாய்நாடு காக்க தாவி பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதி கேட்டு, தனல் மேல் மெழுகானாள் தமிழகத்து கிளி ஒருத்தி.
அனல் போலும் கண்ணுடைய அயலூர் சென்றிருந்த அவள் கணவன் வந்திட்டான்.
புனல் போக்கும் விழியாலே அவள் போர் செய்தி தந்திட்டாள்.
தந்தை களம் பட்ட செய்திக்கோ தவித்தாய்? என்றான்.
இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டு படைக்கோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையில் ஓர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்.
அடைபட்ட கண்ணீர் அணை உடைத்தது அத்தான் என்றாள்.
அவன் குகை விட்டு கிளம்பும் ஒரு புலியென, புகை விட்டு குமுறும் எரிமலையென, பகை வெட்டி சாய்க்கும் வாள் எடுத்தான்.
சூழ் உரைத்தான். சுடர் முகம் தூக்கினான்.
சுக்கு நூறுதான் சூழ்ந்து வரும் படை என்றான்.
நாடு மீட்காமல் வீடு திரும்பேன் என்றான்.
நங்கையோ நகை முழக்கம் செய்து நடந்திடுக கண்ணே! என்றாள்.
திருப்பி வருவேனோ இல்லையோ, எதற்கும் இப்போதே ஒரு முத்தம்.
இந்தா திரும்பு என்றான்.
கொடுத்தான்.
பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்.
போர் போர் போர் எனவே முழங்கிற்று முரச ஒலி.
பார் பார் பார் அந்த பைங்கிளியின் உரிமையாளன் பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார் என்று பட்டாளத்து தோழர் எல்லாம் வியந்துரைத்தார்.
அந்த கட்டாணி முத்தாளும் கண் வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுகாய் குவிந்து வரும் வெற்றிகளை கேட்டு விட்டு.
கோட்டைகள் விடு பட்டன.
எதிரியின் குதிரை கால்கள் உடை பட்டன.
வேழ படை முறிபட்டது.
வேல்கள் பொடி பட்டன.
என் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடை இடியென கேட்குது கேட்குது என குதித்திட்டள்.
புது பண் அமைத்திட்டாள்.
வீரர்கள் வந்தனர்.
வெற்றி உன் கணவனுக்கே என்றனர்.
வேந்தனின் தூதுவர் வந்தனர்.
வாழ்த்துகள் வழங்கினர்.
வீட்டோரத்து தோழிகள் வந்தனர்.
வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்.
அந்த அழகி ஆனந்த கண்ணீர் பொழிந்தாள்.
அப்போது ஏன் அந்த மனிதன் வந்தானோ? இழவு செய்தி சொல்வதற்கு.
என் அருமை பெண் பாவாய்.
கண்ணல்ல கலங்காதே.
களச் செய்தி கடைசி செய்தி கேள் என்றான்.
அந்தோ! மாவிலை தோரணம் கட்டி, மண விழா மேடை தன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல் தாங்கி, நல்ல சாவிலே வீழ்ந்து விட்டான்.
ஆவிதான் போன பின்னும் உயிர் வாழும் ஆரணங்கு, அச்சடித்த தமிழ் பதுமை கூவி அழுதாள்.
கொத்தான மலர் அந்த குடும்பம்.
அதை கொத்தாமல் கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள்.
இழித்துரைத்தாள்.
இனி என்ன மிச்சம் என்றும், கனி அழுகி போனதென்றும் கதறி அழுதாள்.
பனி வெல்லும் விழி காட்டி, பனை வெல்ல மொழியுரைத்து, பள்ளியறை கவி பாடும் நாளெல்லாம் மண் தானோ?
இனி இது தூங்காத கண் தானோ? என அழுதாள் அத்தானின் பிணம் கிடக்கும் களம் நோக்கி தொழுதாள்.
சோகத்தால் வீழ்ந்து விட்ட அவள் காதில், வெற்றி வேகத்தால் பகைவர் தட்டும் போர் முரசம் பட்டதுதான் தாமதம்.
கெட்டதுதான் கெட்டது நம் குடி. முழுவதுமே பட்டொழிந்து போகட்டும் என எழுந்தாள்.
மட்டில்லா புகழ் கொண்ட நாட்டுக்கே அன்றி வீட்டுக்கோ வாழ்வேன்? என்றாள்.
வட்டிலினால் நாள் பார்க்கும் விதம் கொண்ட தமிழ் நாட்டு மாதரசி, தொட்டிலிலே இட்டு தான் வளர்த்த தூய செல்வன், அட்டி இன்றி கல்வி கற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவு கொண்டாள்.
அங்கு சென்றாள். அம்மா என்று பாய்ந்தான் அழகுமிகு மழலை மொழி அன்பு தங்கம்.
அப்பா, தாத்தா ஊர் திரும்பினாரோ என்றான்.
திரும்பி வந்து சாவூர் சென்று விட்டார்.
கரும்பே நீயும் வா என அழைத்தாள்.
என்ன வாங்கி வந்தார் என்றான்.
மானம்! மானம்! அழியாத மானம் என்றாள்.
மகனே அதை சுவைக்க நீயும் வருக என்றாள்.
வந்து விட்டான் குல கொழுந்து.
குடும்ப விளக்கு எரிந்து கொண்டே கூறுகின்றாள்.
எதிரிகளின் படை எடுப்பால் நம் குடும்பம், தலை உதிர்த்து விட்ட மரமாகி போனதடா தம்பி,
கவலை இல்லை.
களம் சென்றார்.
மாண்டார்.
ஆனால், இந்த நிலம் உள்ள வரையில் மானம் காத்தார் என்ற பெயர் கொண்டார்.
மகனே நீயும் உன் தோளிலே பலம் உள்ள வரையில் பகையை சாடு.
பரணி பாடு.
இது உன் தாய் திருநாடு.
உடனே ஓடு என தாவி அணைத்து தளிர் மகன் தன்னை, சீவி முடித்து சிங்காரித்து, ரத்த காவி படிந்த வாள் கொடுத்து, சென்று வா மகனே செறு முனை நோக்கி என வாழ்த்தி விட்ட திருவிடத்து காட்சி தன்னை போற்றி பாடாதார் உண்டோ திருமகளே இப் பூ உலகில்?

 

Courtesy: http://velpaandi.blogspot.com/2015/07/blog-post.html

 

உயிர்மெய் வருக்கம், ஔவையார் ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி – Aathichudi – உயிர்மெய் வருக்கம்

14) கண்டொன்று சொல்லேல்

கண்டொன்று- பார்க்காததை

பார்க்காதவற்றைப் பார்த்ததாகப் பேசாதே

15) ஙப்போல் வளை

ஙப்போல்- ங எழுத்து போல்

ஙகரம் போல் உற்றார் உறவினர்களுக்கு வளைந்து கொடு

16) சனி நீராடு.

17) ஞயம்பட உரை.


18) இடம்பட வீடு எடேல்.

19) இணக்கம் அறிந்து இணங்கு.

20) தந்தை தாய்ப் பேண்.


21) நன்றி மறவேல்.


22) பருவத்தே பயிர் செய்.


23) மண் பறித்து உண்ணேல்.


24) இயல்பு அலாதன செய்யேல்.


25) அரவம் ஆட்டேல்.


26) இலவம் பஞ்சில் துயில்.


27) வஞ்சகம் பேசேல்.


28) அழகு அலாதன செய்யேல்.


29) இளமையில் கல்.


30) அரனை மறவேல். 

31) அனந்தல் ஆடேல்.


உயிர் வருக்கம், ஔவையார் ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்

About Aathichudi:  http://en.wikipedia.org/wiki/Aathichoodi

Author: ஔவையார்

கடவுள் வாழ்த்து

பாடல்:

 “ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

 ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!”

ஆத்தி சூடி – திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த – சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை– ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி – பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே – நாம் வணக்கம் செய்வோம்

பொருள்:

 திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

உயிர் வருக்கம்

1)   அறஞ்செய விரும்பு

(அறம் – தருமம்)

தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!

2)   ஆறுவது சினம்

(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)

கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!

3)   இயல்வது கரவேல்

(இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)

செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!

4)   ஈவது விலக்கேல்

(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)

ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!

5)   உடையது விளம்பேல்

(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)

உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!

6)  ஊக்கமது கைவிடேல்

(ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே)

ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே!!

7)   எண்ணெழுத் திகழேல்

(எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே)

கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.

8)   ஏற்பது இகழ்ச்சி

(ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்)

பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9)   ஐயமிட்டு உண்

(ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து)

கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10)  ஒப்புர வொழுகு

(ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட)

உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

11) ஓதுவது ஒழியேல்

ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே

நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12) ஓளவியம் பேசேல்

ஓளவியம்-பொறாமை மொழி

பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13) அஃகஞ் சுருக்கேல்

அஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே

நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!